இந்தியாவின் அடுத்த மைல்கல் ஆதித்யா எல்1… தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிகார் சுல்தானா.. யார் இவர்..?

Author: Babu Lakshmanan
1 September 2023, 2:39 pm

பல வரலாற்று நாயகர்களை நாட்டிற்கு தந்த அன்றைய திருநெல்வேலி மாவட்டம். இன்றைய தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரத்தைச் சார்ந்தவர் தான் நிகார் சுல்தானா. செங்கோட்டை கீழ பள்ளிவாசல் தெருவை சார்ந்த சேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியினரின் மூன்றாவது மகளாக பிறந்தவர். இவர் செங்கோட்டை அரசு ஆரிய நல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கி, செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.

1978-79 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு கல்வியை செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, 1980-81 ஆம் ஆண்டு முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தவர் நிகார் சுல்தானா.

இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலியில் 1986 ஆம் ஆண்டு அரசு பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து, அவர் BITS இன்ஸ்டியூட்டில் எம்.டெக். படித்தார். தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு இவர் ஐஎஸ்ஆர்ஓவில் பணி கிடைத்து கடந்த 36 ஆண்டு காலமாக அங்கு பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார், மகள் தஸ்நீம் மங்களூரில் எம்.எஸ் (இஎன்டி) படித்து வருகிறார். இவரது சகோதரர் ஷேக் சலீம் சென்னை ஐ.ஐ.டி.யில் டாக்டர் பட்டம் பெற்றவர், மேலும் ஐ.ஐ.ஏ. பெங்களூரில் விஞ்ஞானியாக பணியாற்றி தொடர்ந்து கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய தங்கை ஆஷா ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நிகார் சுல்தானா ஆதித்யா சம்பந்தமாக ஆராய்ச்சி மேற்கொள்ள கடந்த ஆண்டு நாசா சென்று வந்தவர், பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து, ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். செங்கோட்டை அரசு பள்ளியில் படித்த மாணவி, இன்று இஸ்ரோ சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 ஆய்வு திட்டத்தின் முழு பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில், இதை பி.எஸ்.எல்.வி.-எக்ஸ்எல்(சி-57) என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

இத்தகைய விண்கலம் தயாரிப்பில் திட்ட இயக்குனராக ஆதித்யா எல்1 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டா ஏவு மேடைக்கு உயர்த்தியுள்ளார் நிகார் சுல்தானா. இவரின் சாதனை தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிகார் சுல்தானா குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவரது சகோதரர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வசித்து வருகிறார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…