வானதி சீனிவாசன் மீது பரபரப்பு புகார்… திமுகவினரை அவதூறாக பேசியதாக கோவை கமிஷ்னரிடம் மனு!!!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2023, 1:58 pm
கோவை திருச்சி சாலையில் உள்ள சுந்தரேசன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், திமுகவில் கோவை மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணியில் துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் சரவணன் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில், கோவை மாவட்ட பாஜக சார்பில் வி.கே.கே. மேனன் சாலையில் நடந்த பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், வானதி சீனிவாசன் திமுகவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக புகார் தெரிவித்துள்ளார்.
திமுக கவுன்சிலர்கள் ஆனாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்ற கழகத்திற்கு என ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள். அவர்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் என்றும், இது திமுக உறுப்பினர்களின் ஜீன். பாஜகவினரை அக்மார்க் என சொல்லலாம். ஒரே வீட்டில் தான் இருப்பார்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்கள் என தவறாக சித்தரிக்கும் உள்நோக்கத்துடன் பொதுவெளியில் பேசியதாக தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசனின் பேச்சு திமுகவினரை கேவலப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால் ஒட்டுமொத்த திமுகவினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறிய அவர், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துசன் கேவலமாக பேசிய வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.