செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வர வாய்ப்பு… ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 4:44 pm

செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வர வாய்ப்பு… ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!!!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10ஆவது முறையாக வரும் புதன்கிழமை வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. அங்கும் அவர் சாட்சியை கலைத்து விடுவார் என கூறி ஜாமீன் தர மறுத்துவிட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதனிடையே அவர் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று 6ஆவது நாளாக சிகிச்சை பெறும் அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. அவருக்கு கணையத்தில் கொழுப்பு கட்டி இருக்கிறது. மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தம் கட்டியுள்ளது.

இதனால் அவரது கால் மரத்து போகிறது என்றும் முதுகுதண்டில் வலி ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியிருப்பதாவது, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அது போல் அவருடைய மருத்துவ அறிக்கைகளை இணைத்துள்ளோம்.

அதை நீதிமன்றமும் அமலாக்கத் துறையும் ஆய்வு செய்யலாம். செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டை சுட்டிக் காட்டி முகுல் ரோத்தகி வாதம் செய்திருந்தார்.

இதையடுத்து செந்தில்பாலாஜிக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளின் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!