சிறையில் இருந்து கொண்டு செந்தில் பாலாஜி சிக்னல்.. கோவையில் கடையை விரித்த அமைச்சர் : அண்ணாமலை பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2024, 5:00 pm
சிறையில் இருந்து கொண்டு செந்தில் பாலாஜி சிக்னல்.. கோவையில் கடையை விரித்த அமைச்சர் : அண்ணாமலை பகீர்!
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேர்கொண்ட பாஜக கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை என்ன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் அதன் பிறகு இரவு சென்னையில் தங்கி விட்டு நாளை மறுநாள் காலை, முதல் நிகழ்வாக வேலூர் சென்று அங்கு தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் ஆகியோரை ஆதரித்து வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு நீலகிரி பாராளுமன்ற தொகுதி, கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு பிறகு தமிழக சுற்றி பயணத்தை முடித்துவிட்டு செல்வதாகவும் மீண்டும் வருகிற 12-ம் தேதி தமிழகத்தில் ஒரு சுற்றுப்பயணம் உள்ள நிலையில் அதற்கான தேதி முடிவு செய்த பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது சம்பந்தமாக சதி வலையில் நைனார் நாகேந்திரன் பெயர் சொல்லப்படுவதாகவும் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரே சொல்லிய பிறகு இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறியதுடன் இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது தீர விசாரித்து எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனை இல்லை என்று தனிப்பட்ட முறையிலும் கூறிய பிறகு எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.
ஒரு திருடனை போலீஸ் துரத்தும் பொழுது ஒரு வீட்டிற்குள் நுழைந்து மீண்டும் வெளியே வந்து போலீசை குழப்புவதற்காக திருடன் திருடன் என்று அந்த திருடனே கத்துவது போன்று திமுகவின் ஆர் எஸ் பாரதியின் கருத்து இருப்பதாகவும் கிராமப்புற சிறுவர்களை குறி வைத்து தாய் கிராமங்களில் கேலோ இந்தியா மைதானத்தை அமைக்க பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் கோவையில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அடிப்படையில் குழந்தைகள் விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருக்கும் சூழலில் கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கமளிப்பதற்காக திமுக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
இதே போல் முன்னாள் அமைச்சரான அதிமுக வின் உதயகுமாரின் கருத்து தொடர்பாக பேசிய அவர், ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு உதயகுமார் எங்கே இருக்கிறார் அந்த கட்சி எங்கு இருக்கப்போகிறது என்பது தெரியும் எனவும் ஒரு விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும் என்பது போல அவரது கருத்து இருப்பதாகவும் கூறினார்.
மேலும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பைத்தியக்கார மருத்துவமனைக்கு சென்று அவரது மூளையை பரிசோதிப்பதுடன் நல்ல மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் எனவும் உண்மையிலேயே சுய நினைவுடன் ஆரோக்கியமான கருத்துக்களை பேசுகிறாரா அல்லது ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கட்சியை திமுகவிடம் விற்றுவிட்டு அதற்காக பேசுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எத்தனை முறை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் வெளியான நாடுகளுக்கு செல்வார், பெருநகரங்களுக்கு செல்வார் ஆனால் கிராமங்களுக்கு செல்ல மாட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.
கோவை மக்களவைத் தொகுதியில் பல்லடம் சூலூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் மிக முக்கியமான பிரச்சினைகள் இருக்கக்கூடிய பகுதிகள் எனவும் அவர்களது முக்கிய கோரிக்கையாக விசைத்தறி, நீர் மேலாண்மை போன்றவை இருப்பதாகவும் மக்களின் கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஆனைமலை நல்லாறு மற்றும் பொன்னம்புழா பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன் எனவும் விசைத்தறிக்கான பவர் டெக்ஸ் திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து மீண்டும் கொண்டு வருவோம் அதில் சோலார் மின் தகடுகள் பயன்படுத்துவதற்கு 50 சதவீதம் மானியத்திலிருந்து 75% மானியமாக உயர்த்துவோம் என்றும் உறுதி அளித்தார்.
இது மட்டும் இன்றி கோவையில் ஜவுளி பூங்கா அமைக்கும் பொழுது நெசவாளர்களின் பிரச்சினை தீர்க்கலாம் மேலும் நூல் வங்கிகளை அமைத்து விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் மாநகரப் பொருத்தவரை அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் கழிப்பறை இல்லாமல் இருக்கும் ஆதிதிராவிடர் காலனியில் கழிப்பறை கட்டித்தரப்படும்,நொய்யல் நதியை சுத்தப்படுத்த வேண்டும்,கௌசிகா நதியை சுத்தப்படுத்த வேண்டும்,நகரத்தித்குள் விளையாட்டு வசதியை மேம்படுத்த, ஆட்டோமொபைல் கிளஸ்டர் கொண்டு வர வேண்டும் மற்றும் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் என்பதற்கான உத்தரவாதம் கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு தோல்வி பயம் அதிகரித்து விட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினசரி போனில் பேசுவதாகவும் டி.ஆர்.பி.ராஜாவிற்கு அவர்தான் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார் எனவும் என்னதான் திதைக்கதை வசனம் எழுதி அதை இங்கு அமைச்சரும் வேட்பாளரும் செய்தாலும் தங்க சுரங்கத்தையே இங்கு கொட்டினாலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2021ல் திமுக ஆட்சி வருவதற்கு முன்பாகவே 2020 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் இஸ்கான் மூலம் செயல்படுத்தப்பட்டதாகவும் தமிழகத்திலும் அப்பொழுதே இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்கான் அனுமதி கேட்டிருந்ததாகவும் கூறியதுடன், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த காலை உணவு திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும் திமுகவை பொருத்தவரை சூரியன் தோன்றியதும், கடல் தோன்றியதும், ஆடை உடுத்திக் கொண்டு நாகரீகமாக வாழ தொடங்கியதும் 1967 க்கு பிறகு என்பது தான் நினைப்பாக இருக்கிறது என்றும் நகைப்புடன் கூறினார். தன்னைப் பொறுத்தவரை சிறுபான்மை பெரும்பான்மை என்று இல்லை மூன்று ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக இப்தார் நோன்பு திறந்து கொண்டிருப்பதாகவும் சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருவதாகவும் கோவை மக்களை மக்களாகத்தான் பார்க்கிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன் தினம் காவல்துறையினர் பாஜக அண்ணாமலைக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, காலியாக இருந்த பிரச்சார வாகனத்தை அதிமுகவினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் வேட்பாளர் உள்ளே இருக்கிறாரா இல்லையா என்பதை கூட தெரியாமல் அவர்கள் டயரை சுற்றி மறியல் செய்தார்கள் என்றால் அந்த அளவிற்கு தான் அவர்களது புத்தி இருக்கிறது எனவும் டயர் என கட்சியை குறிப்பிட்டு நான் கூறவில்லை எனவும் அவர்கள் மறியல் செய்த நேரத்தில் அடுத்த பத்து பாயிண்ட்டுகளை கடந்து தான் பிரச்சாரத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.