காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் கச்சா எண்ணெய்-க்கு தனி துறைமுகம் : மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Author: Babu Lakshmanan29 September 2022, 5:58 pm
காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி செலவில் கச்சா எண்ணெய் துணை துறைமுகம் (jetty) கட்டப்படுவதாக மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் இறக்கும் தளத்தை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி பேசியதாவது :- இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளேன். இன்று காலை மணலி அருகே அமைந்து வரும் இந்தியன் ஆயில் உயவு எண்ணெய் திட்ட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டேன். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை பார்வையிட்டேன்.
தற்போது காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி செலவில் கச்சா எண்ணெய் துணை துறைமுகம் (jetty) கட்டப்படுகிறது. கச்சா எண்ணெயை குழாய் மூலம் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலை உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளைகள் வழங்க உள்ளேன். மேலும், நாளை தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறேன். ESI மருத்துவமனை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன், என அவர் தெரிவித்தார்