இந்த தடவ மிஸ்ஸே ஆக கூடாது அடிங்கடா.. தொழில் ரீதியான போட்டியில் கட்சி பிரமுகரை தாக்கிய அடியாட்கள்..!

Author: Vignesh
21 August 2024, 5:50 pm

கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி திமுக கிளைச் செயலாளர் உதயகுமார் 10 அடியாட்களை கொண்டு தாக்கியதில் திமுக புதுப்பட்டி ஊராட்சி துணைச்செயலாளர் தங்கராசு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி துணைச் செயலாளராக இருப்பவர் தங்கராசு (வயது 40) இவரது மனைவி சுகன்யா இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே ஊராட்சியில் திமுக கிளைச் செயலாளராக உதயகுமார் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தங்கராசு இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது அவரை வழி மறைத்த திமுக கிளைச் செயலாளர் உதயகுமார் மற்றும் சரண், கார்த்திக், சுபாஷ், கு.ப. மணிகண்டன் உட்பட 10 நபர்கள் சரமாரியாக ஆயுதங்கள் மற்றும் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். மேலும் தங்கராசு ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதில், தலை, முதுகு, தொடை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டு நிலைகுலைந்த தங்கராசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புதுப்பட்டி ஊராட்சி திமுக கிளைச் செயலாளர் உதயகுமார் மற்றும் துணைச் செயலாளர் தங்கராசு ஆகியோருக்கு இடையே தொழில் ரீதியான போட்டி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கிடையே ஏற்கனவே, இதுபோன்ற சண்டைகள் 10 முறைக்கு மேல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து கன்னிவாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தங்கராசு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியவாரே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!