திண்டுக்கல் மருத்துவமனையில் கட்டுக்கடங்கா தீ விபத்து.. 7பேர் பலி.. என்ன காரணம்?
Author: Hariharasudhan13 December 2024, 9:50 am
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் – திருச்சி சாலையில் சிட்டி என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (டிச.12) இரவு 9.40 மணியளவில், மருத்துவமனையின் கணினிப் பிரிவு பகுதியில் தீ விபத்து (Dindigul Private Hospital fire Accident) ஏற்பட்டு உள்ளது.
பின்னர், இந்தத் தீ உடனடியாக மருத்துவமனையின் நான்கு தளங்களுக்கும் பரவி உள்ளது. இதனால், மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கும் மேலான நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். இதனையடுத்து, இது குறித்து தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ளே இருந்த ஒரு சிறுவன் உள்பட 7 பேர் தீயில் கருகியும், புகை மண்டலத்தால் மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
மேலும், 4 மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கார் மீது ஈச்சர் லாரி மோதி கோரம் : 2 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சோகம்!
இதனைத் தொடர்ந்து, தீ விபத்து குறித்த தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையிலிருந்த நோயாளிகளும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதல்வர் விரைவில் நிவாரணம் அறிவிப்பார் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வந்துள்ளார்.
தற்போது உயிரிழந்த நபர்கள் யார் யார் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தோர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி, அவரது மனைவி சுப்புலட்சுமி, தாடிக்கொம்பு ரோடு பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள், அவரது மகன் மணி முருகன், என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் என உயிரிழந்துள்ளனர்.