தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில்… இரண்டு ஆண்கள் கைது.. பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் அனுமதி!!
Author: Babu Lakshmanan27 March 2024, 10:00 pm
திருப்பூரில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் பிணலாடை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபர்களை குறிவைத்து பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த குரலகம் என்ற தனியார் தங்கும் விடுதியை தெற்கு காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சென்னை ஆவடியை சேர்ந்த பெண்ணை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவரையும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரையும் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்,” எனக் கூறினர்.