4 நாட்களில் தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவங்கள்.. ஸ்டாலினுக்கு எதிராக பாயும் கேள்விகள்!
Author: Hariharasudhan7 February 2025, 2:56 pm
தமிழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் கொடுமை சம்பவங்களால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சென்னை: ”மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி?” என தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
காரணம், இன்று மட்டுமே திருச்சி, மணப்பாறை அருகே உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி தாளாளர் கணவர், முதல்வர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கோவையில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிலும், ‘கர்ப்பிணினு கூட பாக்கல, அரைமணி நேரம் போராடுனேன், கத்துனதால இரக்கமே இல்லாம என்னைய கீழ தள்ளிவிட்டான்’ என பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கண்ணீர் மல்க கூறியது இன்று தமிழகம் முழுவதும் ரணமாகியுள்ளது. மேலும், சிவகங்கை அருகே அரசுப் பள்ளி மாணவியை போட்டோ எடுத்து வர்ணித்ததாக, தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் கைது என இன்றைய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற குற்றச் சம்பவங்களும் அடுத்தடுத்து பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக இருக்கின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதோடு, சிவகங்கை மானாமதுரை அருகே 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டது என பாலியல் தொல்லை சம்பவங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணினு சொல்லியும் விடல.. பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி!
அந்த வகையில், “கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது.
பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியுள்ளார்.