பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனை லேப் டெக்னீசியன்!!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2022, 3:42 pm
கரூரில் லேப் டெக்னிஷன் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனை லேப் டெக்னிஷன் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் வசிக்கு 18 வயது கொண்ட மாணவி திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் 2ம் ஆண்டு லேப் டெக்னிஷன் பயிற்சியில் சேர்ந்து பயின்று வருகிறார்.
இந்த கல்லூரியில் இருந்து லேப் டெக்னிஷன் பயிற்சிக்காக கரூரில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் (ஏபிஎஸ்) மருத்துவமனையில் உள்ள லேப்பிற்கு மாணவியை பயிற்சிக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த லேப்பில் பணியாற்றும் துரை என்ற இளைஞர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவி துரையிடமிருந்து விடுபட்டு வெளியேறி விட்டார்.
அடுத்த நாளும் இதே போன்று துரை ஈடுபட்டதால் கோபடைந்த மாணவி மருத்துவமனையை விட்டு வெளியேறி தான் படிக்கும் பாரா மெடிக்கல் கல்லூரிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார் மாணவி. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சிக்கு வந்த மாணவியை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.