ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டம்… முன்னெச்சரிக்கையாக இந்திய மாணவர் சங்கத்தினர் கைது.. போலீசார் குவிப்பால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
23 December 2023, 4:29 pm

நீட் மசோதாவிற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட திட்டமிட்டிருந்த இந்திய மாணவர் சங்க அமைப்பினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் உலக பிரசித்தி பெற்ற கந்தூரி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி, நாகூர் கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு வந்து அங்கிருந்து தரைவழி மார்க்கமாக காரில் திருவாரூர் வருகை தந்தார்.

அதனை தொடர்ந்து, திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் காலை உணவு அருந்திவிட்டு, சிறிது நேர ஓய்வுக்கு பின் அவர புறப்பட்டு நாகூர் செல்கிறார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, நீட் மசோதா உள்ளிட்ட மசோதாவிற்கு கையெழுத்திடாமல் தமிழகத்திற்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி திருவாரூரில் இயங்கி வரும் திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பயின்று வரும் இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, திருவாரூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் கல்லூரி வளாகத்திற்கு சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக ஆளுநர் நாகூருக்கு சென்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 349

    0

    0