’நடிப்பு ஒத்துவரலனா..’ அதிதிக்கு திடீர் கண்டிஷன் போட்ட ஷங்கர்!
Author: Hariharasudhan31 January 2025, 6:56 pm
திரைத்துறையில் வெற்றி பெறவில்லையென்றால், மீண்டும் மருத்துவராக வேண்டும் என ஷங்கர் நிபந்தனை விதித்ததாக அதிதி கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர், “மருத்துவப் படிப்பு முடிந்ததும் தான் நடிக்க முயற்சிப்பேன் என நான் அப்பாவிடம் கூறினேன். உடனடியாக அவர் பதிலளிக்கவில்லை. மாறாக, அவர் நீண்ட நேரம் யோசித்துவிட்டு, கடைசியில் ஒரு நிபந்தனையுடன் எனக்கு அனுமதி வழங்கினார்.
அது என்ன நிபந்தனையென்றால், நான் திரைத்துறையில் வெற்றி பெறவில்லை என்றால், மருத்துவத்திற்குத் திரும்ப வேண்டும் என்பது தான்” எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது திரை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இதில், கிராமத்துப் பெண்ணாக நடித்து வரவேற்பைப் பெற்ற அதிதி, அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்தார்.

இப்படமும் வெற்றியடைந்ததால், அதிதி திரையுலகில் பேசப்பட்டார். இந்த நிலையில், ஆகாஷ் முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான நேசிப்பாயா என்ற படத்திலும் அதிதி கதாநாயகியாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதையும் படிங்க: காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. சமந்தா பாணியில் பதிவு போட்டதால் சர்ச்சை!
குறிப்பாக, தமிழ்நாட்டில் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதேநேரம், தனது முதல் படத்திலேயே ‘மதுர வீரன் அழகுல..’ என்ற பாடலையும், இரண்டாவது படத்தில் ‘வண்ணாரப்பேட்டை..’ என்ற பாடையும் பாடி பாடகியாக அடையாளப்படுத்தினார்.
இருப்பினும், இவரது மேடைப்பேச்சு, மேடையில் பாடுவது ரசிகர்களிடையே கலவையான கருத்துகளைப் பெற்றது. மேலும், அதிதி தற்போது ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், தெலுங்கில், சூரியின் கருடன் படத்தின் ரீமேக்காக உருவாகும் பைரவம் என்ற படத்திலும் கதாநாயகியாக அதிதி நடித்து வருகிறார்.