பழச நினைச்சு வருத்தப்படாதீங்க… இந்த முறை என் அண்ணன் வந்திருக்காரு ; சண்முக பாண்டியன் முதல்முறையாக பிரச்சாரம்..!!
Author: Babu Lakshmanan12 ஏப்ரல் 2024, 7:37 மணி
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முதல்முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க: கரூர்-ல நீங்களா போட்டியிடுறீங்க…? ஜோதிமணி எங்கே..? திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த பொதுமக்கள்..!!
சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி, பாவடிதோப்பு, காந்தி மைதானம், வேலாயுதபுரம், சிவன் கோவில், சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, ராமசாமிபுரம், எம்எஸ் கார்னர், வெள்ளக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது காந்தி மைதானம் பகுதியில் சண்முக பாண்டியனை காண வந்த பெண் ஒருவர், அவரை கண்டதும் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு பெண் குழந்தை ஒருவர் தனக்கு பிறந்தநாள் எனக் கூறி சண்முக பாண்டியனுக்கு இனிப்புகள் வழங்கினார். இனிப்புகளை பெற்றுக் கொண்ட சண்முக பாண்டியன் அந்த குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சண்முக பாண்டியன், “இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா கோவிலில் இருக்கும்போது பலரிடம் கூறினார்கள், ஒரு முறையாவது அப்பாவை வெற்றிபெற வைத்திருக்கலாம் என வருத்தப்பட்டார்கள். என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம்.
அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெற வைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும். இந்த மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அதை என்னுடைய அண்ணன் இந்த தொகுதியில் இருந்தே மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அதை தீர்த்து வைப்பார். உங்கள் வீட்டு பிள்ளையாக அண்ணனாக மகனாக விஜய பிரபாகரன் நிற்கிறார் அவருக்காக நீங்கள் முரசு சின்னத்திலே வாக்களியுங்கள் எனக்கூறி முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
0
0