விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல்… கடவுள் மறுப்பாளர்களின் திட்டமிட்ட சதி ; மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் இந்து அமைப்புகள்..!!
Author: Babu Lakshmanan16 September 2023, 5:22 pm
கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நாளை நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி மாநில செயலாளர் அறிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் விதிகளை மீறி ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் இருந்த மூன்று விநாயகர் சிலை கூடங்களுக்கு பூட்டி சீல் வைத்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். அதற்கு விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பசுமை தீர்ப்பாய உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும், மண்பாண்ட தொழிலாளர்கள் புகாரின் பேரில் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் சுங்ககேட் பகுதியில், விநாயகர் சிலைகள் சீல் வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் கூறியதாவது :- கரூரில் கடந்த 10 ஆண்டுகளாக வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பே இப்பகுதியில் சிலை செய்யும் பணியை வட மாநில தொழிலாளர்கள் துவங்கிய போது, அதிகாரிகள் அந்த பணியை தடுத்து நிறுத்தி இருந்தால், சுமார் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்த வட மாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட தனிநபர் ஒருவரின் வியாபார நோக்கத்திற்காக, அவர் அளித்த புகாரின் பேரில் முறையாக ஆய்வு செய்யாமல் விநாயகர் சிலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் நாளை காலை 10 மணியளவில் கரூர் மாநகரில் இந்து அமைப்பினர் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், என்று தெரிவித்தார்.