‘2 நாட்களாகியும் வீட்டுக்கு வரல’… 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போலீசாருக்கு ஷாக்… மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு..!!
Author: Babu Lakshmanan17 November 2022, 5:10 pm
கரூர் : கரூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்கும் முன் அதே தொட்டியில், மேலும் ஒரு தொழிலாளரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மணவாசி அடுத்த சின்னமலை பட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் (வயது 36) என்ற இளைஞர் இரண்டு நாட்களாக வீட்டுக்கு வராத நிலையில், அவரது சகோதரர் சரவணன் என்பவர் தேடி வந்துள்ளார். இந்த நிலையில் தொட்டியில் இருந்து உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர் கழிவு நீர் தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு உடலை மீட்டனர். பின்னர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.