தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு : சுட்டது யார்? 16 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2022, 12:50 pm
பழனியருகே தோட்டத்து காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுடபட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது மானூர். இங்கு ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் கார்த்தி(வயது 24). கும்பகோணத்தை சேர்ந்த இவர் தோட்டத்தில் தங்கியிருந்து காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல காவல்பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 12மணியளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதில் திடீரென கார்த்தியின் நெஞ்சில் ஒரு குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த கார்த்தி கீழே சரிந்தார்.
இதனையடுத்து தோட்டத்தில் இருந்த சிலர் கார்த்தியை நெஞ்சில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கார்த்தியின் நெஞ்சில் பட்ட குண்டை பழனி அரசு மருத்துவமனையில் அகற்றமுடியாமல் மேல்சிக்கிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் கார்த்தியை சுட்ட இடத்தில் கீழே விழுந்த துப்பாக்கி குண்டுகளை சேகரித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் தர மறுத்து விட்டனர்.
காவலாளி கார்த்தியை துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? எதற்காக சுட்டனர்? வேட்டையாட வந்த நபர்கள் சுட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.