கஞ்சா வாங்க பணம் கேட்டு அடாவடி… மளிகை கடைக்காரரை தாக்கிய செல்போன், ரொக்கம் பறிப்பு… 7 பேருக்கு வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 11:51 am

காஞ்சிபுரம் நகர் பகுதியில் பட்டா கத்தியுடன் வலம் வந்த கஞ்சா போதை இளைஞர்கள் “கஞ்சா வாங்க பணம்” கேட்டு வழியில் வந்த ஏழு பேர்களை தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்த சம்பவம் நகரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளப்பன் தெரு பகுதியில் விமல் என்பவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில் வந்த மூன்று இளைஞர்கள் கடையில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார்கள். விமல் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட கஞ்சா போதை இளைஞர்கள் கடையில் இருந்த மாவு பாக்கெட்டை தூக்கி வீசி விட்டு கடைக்குள் நுழைந்து பட்டா கத்தியால் கடைக்காரரை தாக்கியுள்ளனர். மேலும், கல்லாவில் இருந்த பணத்தையும், செல்போனையும் எடுத்துக் கொண்டு, கஞ்சா போதை ஆசாமிகள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.

இதே போன்று, சின்ன காஞ்சிபுரம் பகுதியை சுற்றிலும் அடுத்தடுத்த கடை மற்றும் பொதுமக்களை பட்டா கத்தியால் தாக்கியுள்ளனர். கஞ்சா ஆசாமிகள் தாக்கியதில் ஏழு பேர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கஞ்சாவால் அதிக குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், காஞ்சிபுரம் நகரிலும் தினந்தோறும் கஞ்சா போதை ஆசாமிகளால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

https://player.vimeo.com/video/783536977?h=2d2dcbb4d3&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

பட்டா கத்தியுடன் தப்பி சென்ற கஞ்சா போதை இளைஞர்கள் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் சிசிடிவி காட்சியை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப நாட்களாக காஞ்சிபுரம் நகரில் மீண்டும் ரவுடிகளின் ராஜ்ஜியம் தலைதூக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!