உங்க முன்னாடி நாங்க உட்காரக் கூடாதா? ஆட்சியருக்கு ‘மாமன்னன்’ பட டிக்கெட் புக் செய்து அனுப்பிய பா.ம.க நிர்வாகி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2023, 1:00 pm

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களது மனுக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவர்.

இந்நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை People Of Coimbatore என்ற அமைப்பினர் கனிம வளக்கொள்ளை குறித்து மனு அளித்தனர். அப்போது அந்த அமைப்பில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மனுவை அமர்ந்து கொண்டே வாங்கியதாகவும் மனு அளிக்க வந்த பொதுமக்கள் நின்று கொண்டே மனு அளிப்பதாகவும், இது மாவட்ட ஆட்சியர் மேலானவர் போலவும் மக்கள் தாழ்வானவர் போலவும் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்பியதாக அசோக் ஸ்ரீநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்தான அவரது ட்விட்டர் பதிவில், நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்கம். குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீது பெற வேண்டும், பின்பு ரசீதை வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள் நாங்கள் உங்கள் முன் நின்று பேச வேண்டும்.

உங்களை நாங்கள் அன்னார்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டு இருக்கும். உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும் உங்களை விட நாங்கள்(மக்கள்) தாழ்வானார் போலவும் இருக்கும்.

நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும் நீங்கள் வெறும் அரசு ஊழியர் தான் மக்கள் பிரச்சனையை தீர்ப்பது உங்கள் கடமை. மேடையில் இடமிருந்தும் மக்களை ஏன் நிற்க வைக்க வேண்டும் உங்களின் முன்பு நாங்கள் உட்கார கூடாதா?

உடனடியாக இதை சரி செய்யவும் இல்லை என்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன் தான் வருவேன் என பதிவிட்டு தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் மக்களை தவறாக நடத்த வேண்டாம் என தமிழக முதல்வரையும் குறிப்பிட்டுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…