குலை தள்ளிய வாழைகள்… ஒரே இரவில் 700 வாழை மரங்கள் அடியோடு நாசம் : காட்டு யானைகள் அட்டகாசத்தால் விளைநிலங்கள் சேதம்.. கதறி அழுத விவசாயி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 5:48 pm

மேட்டுப்பாளையம் தோலம்பாளையம் மணல்காடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டு யானைகள் புகுந்ததால் 700 க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சேதமடைந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, ஊமப்பாளையம், தாசம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக கடந்த பல நாட்களாகவே தாசம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தோலம்பாளையம் மணல்காடு பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியின் அருகிலேயே முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ராமசாமி என்பவரது விளைநிலத்தில் சோலார் மின்வேலியினை உடைத்து உள்ளே புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்தும் நாசம் செய்துள்ளன.

இதனால் இந்த வாழை விவசாயத்தை நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த விவசாயி ராமசாமியின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தங்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

நாளைக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் யானைகளால் நாசம் செய்யப்பட்ட பயிர்களை வனத்துறை அலுவலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கும் தீர்வு எட்டப்படாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து விவசாயி சந்திரகுமார் கூறுகையில் ஒரு வாழை பயிரிட்டு முதிர்வு வரை சுமார் ரூ.500 ஒரு வாழைக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நம்பிக்கையில்லாத விவசாயமாக மாறி வருவதாக கவலை தெரிவித்தார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!