பெண் எஸ்ஐ அதிரடி கைது.. அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில் திருப்பம்!
Author: Hariharasudhan8 January 2025, 11:24 am
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்காததாக பெண் எஸ்ஐ ராஜி கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், பாலியல் வன்கொடுமை அளித்த நபர் குறித்து புகார் அளிக்கச் சென்ற தங்களை, போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர். பின்னர், இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில், சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதேநேரம், வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான புலனாய்வுக் குழு, குற்றம் சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் ஆகியோரைக் கைது செய்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடத்தவில்லை என்ற புகாரில் பெண் காவல் ஆய்வாளர் ராஜியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக வட்டச் செயலாளராக இருந்த சுதாகரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சுதாகருக்கு என்ன தொடர்பு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற சிறுமியின் தாயாரிடம் சுதாகர் கட்டப்பஞ்சாயத்து செய்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
அதாவது, கைது செய்யப்பட்ட சதீஷ் என்பவரது பெயரை வழக்கிலிருந்து விடுவிக்க, அவரிடம் இருந்து பணம் பெற்றுத் தருவதாக குழந்தையின் தாயாரிடம் சுதாகர் கட்டப்பஞ்சாயத்து செய்ததை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சதீஷுக்கு ஆதரவாக இருந்து, அவர் தலைமறைவாக இருக்க சுதாகர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது.