நடுரோட்டில் மனைவியை இறக்கிவிட்டு காரில் கொளுந்தியாளை கடத்திய எஸ்ஐ : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் காவல்துறை வைத்த செக்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 12:57 pm

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). இவரது மனைவி சத்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் மதுவிலக்கு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

எப்படியாவது இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு வகையில் திட்டமிட்டார். பி.எட். படித்து வந்த கொழுந்தியாளியிடம், மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து வெங்கடாசலம், சத்யா மற்றும் கொழுந்தியாளுடன் காரில் மதுரைக்கு சென்றார். இதற்கிடையே மதுரைக்கு முன்புள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், சத்யாவை கீழே இறக்கி விட்டார்.

பின்னர் வெங்கடாசலம் கொழுந்தியாளை மட்டும் கடத்திக் கொண்டு மதுரைக்கு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, இதுகுறித்து சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் வெங்கடாசலம், கொழுந்தியாளை கடத்தி சென்றது உறுதியானது. மேலும் அவர் கொழுந்தியாளுடன் பழகிய 2 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடத்தல் உள்பட 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைதொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?