சித்தர் போகர் மீண்டும் வருகிறார்?…சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியின் கட்டளை: ஆன்மீகவாதிகள் கூறும் அதிசயம்..!!
Author: Rajesh1 April 2022, 5:30 pm
திருப்பூர் – காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் போகரின் படம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் தமிழகத்தில் முருகப் பெருமான் குடிகொண் டிருக்கும் மலைக் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலானது அருணகிரி நாதரால் படல்பெற்ற தலமாகும்.
வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சுவாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
இந்நிலையில் கடலூரை சேர்ந்த கபில்தேவ்(45) எனும் பக்தரின் கனவில் வந்து போகரின் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவானதையடுத்து இன்று மலைக்கோவிலுக்கு வந்திருந்தார்.கோவிலில் பூ வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைத்ததை தொடர்ந்து சித்தர்களில் முக்கியமான வரும் பழனி முருகன் நவபாசன சிலையை செய்தவருமான போகர் சித்தரின் படம் வைத்து பூசை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பாக இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒருமாதத்தில் மட்டும் பருத்தியின் விலையும், நூல் விலையும் அபிரிமிதமாக உயர்ந்து,இன்று நூல் விலை ரூ.420 தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வைத்து பூஜை செய்யும் பொருட்கள் சமூகத்தில் நடக்கும் நன்மை தீமைகளை முன்கூட்டியே உணர்த்துவதாக அமையும். சித்தர்களிளேயே மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், தமிழ்க் கடவுள் முருகன் சிலையை செய்த வருமான போகரின் படம் உத்திரவாகி உள்ளதால், உலகம் மீண்டும் சித்தர்களை நோக்கி திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.