சித்ரா பௌர்ணமியில் ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் : குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2022, 10:51 pm
கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இரு காட்சிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
சித்ரா பவுர்ணமியன்றி சூரியன் மறையும் அதேநேரத்தில் சந்திரன் உதயமாகும் இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும்.
இந்த அபூர்வ காட்சியை காண ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. இதனால் கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமியான இன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேகமூட்டத்தால் சூரிய அஸ்தமனம் தெரியவில்லை.
அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் எழுந்தது.
இந்தஅரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் சிறப்பு வழிபாடு,ரூ.1கோடி மதிப்புள்ள வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியா குமரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
0
0