சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் குளம் : சிங்காரிக்கப்பட வேண்டிய சிங்காநல்லூர் குளத்தை அரசு மறந்தது ஏனோ? கவலையில் இயற்கை ஆர்வலர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan3 August 2022, 4:45 pm
கோவை மாநகராட்சி திருச்சி சாலை சிங்கநல்லூர் பகுதியில் 288 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120 வகையான பல்லுயிர்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.
இதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் இந்த குளத்தை பராமரிப்பு செய்யப்படாமல் இருக்கிறது என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அப்போதைய இருந்த மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி 10ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த குளம் மாநகராட்சி பராமரிப்பு செய்யாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி பெயரில் கோவை வாலங்குளம், பெரியகுளம் உள்ளிட்டவை அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்பாக கோவை மாநகரத்தின் முக்கிய குளமாக விளங்கிய சிங்காநல்லூர் குளத்தை மாநகராட்சி மறந்துவிட்டதே என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.