மாடுகளை விற்று மாடர்ன் டாய்லெட்.. உட்ரா வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு.. சீர்காழி கல்யாண ராணி சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan28 January 2025, 12:15 pm
சீர்காழியைச் சேர்ந்த பெண் 4 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள கொடியம்பாளையம் மீனவர் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமி (29). இவர் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்த நிலையில், பழையார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை லட்சுமி திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் உயிரிழந்து விட்டதால், குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டில், புத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் நெப்போலியனைச் சந்தித்த லட்சுமி, தனது பெயர் மீரா எனவும், தான் நர்ஸ் வேலை பார்ப்பதாகவும் கூறி, அவரைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அவரைப் பிரிந்து, 2021ஆம் ஆண்டு சிதம்பரம் கோல்டன் நகரில் வசித்து வந்த கோயம்புத்தூர் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜா என்பவருடன், சேலம் பேருந்து நிலையத்தில் லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரிடம் தனது பெயர் நிஷாந்தினி என்றும், தான் எம்பிபிஎஸ், எம்எஸ் படித்துள்ளதாகவும் கூறி, அவரைக் காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதன்படி, அவருடன் சிதம்பரத்தில் இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்தி வந்த லட்சுமி, கடந்த 2024ஆம் ஆண்டு சீர்காழி திட்டை கிராமத்தைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணியாற்றும் சிவசந்திரனிடம் லிப்ட் கேட்டு பைக்கில் சென்று, தன்னை டாக்டர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வேலை பார்ப்பதாகக் கூறி அவரிடம் பழகியுள்ளார். இந்த நிலையில், ஜனவரி 20 அன்று, சிவச்சந்திரன், சீர்காழியில் லட்சுமியை திருமணம் செய்துள்ளார். இதற்காக அவரது நண்பர்கள் வைத்த பேனர் வலைத்தளங்களில் பரவியுள்ளது.
இதனைப் பார்த்த முன்னாள் கணவர் நெப்போலியன், சிவச்சந்திரனை தொடர்பு கொண்டு, லட்சுமிக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணமானதாக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவச்சந்திரனிடம், லட்சுமி, தனது நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்துள்ளார். அதற்கு கட்டாயம் செல்ல வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிவச்சந்திரன், லட்சுமியை காரில் விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், நேராக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார் சிவச்சந்திரன். பின்னர், அங்கு நடந்த விவரங்களை தெரிவித்தபோது கையும் களவுமாக சிக்கினார் லட்சுமி.
இவ்வாறு காவல் நிலையத்தில் லட்சுமி சிக்கயதை அறிந்த முன்னாள் கணவர்கள், சீர்காழி காவல் நிலையம் வந்தனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. மேலும் கரூரைச் சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ததாகவும், அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், லட்சுமி பற்றி அவருக்குத் தெரியவில்லை எனத் தெரிகிறது.
பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், லட்சுமியைக் கைது செய்தனர். தொடர்ந்து, சீர்காழி நீதிமன்றத்தில் லட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு, திருவாரூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமி தன்னை டாக்டர் எனவும், தான் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோவில் அருகே பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பட்டப்பகலில் துணிகரம்!
குறிப்பாக, கரூரைச் சேர்ந்த ஒருவர் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அவர் மாதந்தோறும் குடும்பச் செலவுக்காக அனுப்பி வைக்கும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, லட்சுமி தனது சம்பளம் எனக் கூறி மற்ற கணவர்களை ஏமாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், லட்சுமி டாக்டர் என்பதால், அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். அதிலும் ஒரு கணவர், வீட்டில் இருந்த மாடுகளை விற்று மாடல் டாய்லெட் கட்டிக் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட மூன்று பேரிடமும, தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பர் எனவும், எனவே வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியதும் தெரிய வந்துள்ளது.