வகுப்பறையிலேயே ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்… படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஆத்திரம் ; சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 12:06 pm

சிவகாசி அருகே அரசு பள்ளியில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பபு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை (42). இந்நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிறப்பாக படிக்க சொல்லி மாணவ, மாணவியரிடையே கண்டிப்புடன் ஆசிரியர் கடற்கரை நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து, காலை நேர இடைவேளை நேரத்தில் வீட்டிற்குச் சென்ற அதே வகுப்பைச் சேர்ந்த முகேஷ் மற்றும் யோகேஷ் ஆகிய இரு மாணவர்களும், அங்கிருந்து கத்தி மற்றும் அருவாளுடன் பள்ளிக்கு வந்து அங்கு ஓய்வறையில் இருந்த ஆசிரியர் கடற்கரையை பின்பக்க தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தலையில் காயம் அடைந்த ஆசிரியர் கடற்கரை திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இந்த இரு மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து தனித்தேர்வு எழுதிவிட்டு மீண்டும் 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் நான்கு தனிப்படை அமைத்து ஆசிரியரை வெட்டிச் சென்ற மாணவர்களை தேடி வந்த நிலையில் பெரியார் காலனி பகுதியில் முட்புதரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 522

    0

    0