படு பாதாளத்திற்கு சென்ற சின்ன வெங்காயம் விலை : கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2022, 7:52 pm
ஈரோடு : தாளவாடி மலைப்பகுதியில் சிறிய வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாளவாடி மலைப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இங்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி சிறிய வெங்காயம்,தக்காளி, பீன்ஸ்,கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிலோ 30 முதல் 45 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிறிய வெங்காயம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது சிறிய வெங்காயம் அறுவடைக்கு வந்துள்ள நிலையில் கிலோ 3 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சிறிய பல இடங்களில் சிறிய வெங்காயம் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.