ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தல்.. 21 கிலோ பறிமுதல் : குடும்பமே சிக்கியது எப்படி?
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 4:55 pm
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவின் சிறப்புப் படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: போலீசை வைத்து மிரட்டும் பொறுப்பு அமைச்சர்… திமுக நிர்வாகிகள் குமுறல்!
தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 13351) சென்ற பிறகு, மேடை எண். 1A-ன் திருப்பூர் முனையில், ஆறு பேர் சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று வெள்ளை நிற பாலித்தீன் பைகளை எடுத்துச் செல்வதைக் கண்டனர். உடனடியாக அவர்கள் விசாரிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் திருப்திகரமான பதிலளிக்கவில்லை. முன்னுக்குப் பின் முரணான பதிலையே கொடுத்துள்ளனர்.
சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்தப் பைகளைத் திறந்து சோதனை செய்தனர். அதில் போதைப்பொருள் கலந்த உலர்ந்த கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜபத் திகல் (வயது 25), கண்டி திகல் (வயது 46), சுலதா நாயக் (வயது 37), ரூபினா நாயக் (வயது 44), ஜோத்ஸ்ராணி திகல் (வயது 44) மற்றும் கெலெய் நாயக் (வயது 32) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 31 லட்சம் ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளை பாலித்தீன் பையிலும், 20.5 கிலோ முதல் 21 கிலோ வரை கஞ்சா இருந்தது. அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
