பாம்புகளை காட்டி வித்தை காட்டி நபர்…வீடியோ வைரலான நிலையில் கம்பி எண்ணும் பரிதாபம்..!!
Author: Babu Lakshmanan8 August 2022, 1:17 pm
தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய நபரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கடந்த ஜூலை 7 அன்று ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், கலைஞர் ஒருவர் பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வன அலுவலர்களுக்கு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், ஓட்டப்பிடாரம் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வன காவலர் லட்சுமணன் ஆகியோர் கோவில் திருவிழா நடந்த வன அலுவலர்கள் எஸ் குமாராபுரத்தில் உள்ள கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் மதுரை ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் ராஜேஷ் குமார் (46) என தெரிய வந்தது. இதை அடுத்து வனத்துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர் செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும், கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய பிறகு மீண்டும் காட்டுப் பகுதிக்குள் பாம்புகளை விட்டு விடுவதாக ராஜேஷ் குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.