3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!
Author: Hariharasudhan28 March 2025, 7:54 pm
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் மல்லாங்கிணறு அடுத்த கீழத்துலுக்கன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35 ). இவர் பி.எட் முடித்துள்ளார். இந்த நிலையில், இவர் அந்த ஊரின் காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர், கத்திக்குத்து காயங்களுடன் கீழே கிடந்துள்ளார். அப்போது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்து மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், படுகாயத்துடன் கிடந்த ராஜேந்திரனை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராஜேந்திரனுக்கு திருமணமாகி 3 நாட்களில் அவரது மனைவி பிரிந்து சென்று விவாகரத்து ஆகியுள்ளது. அதேநேரம், அதே ஊரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி.

இவர் கணவரை இழந்த நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராஜேந்திரனும், மகாலட்சுமியும் தொடர்பில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை, மகாலட்சுமியின் மகன் பிரபாகரன் (19) அறிந்துள்ளார். எனவே, ராஜேந்திரனை பல முறை பிரபாகரன் கண்டித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!
ஆனால், இதனை ஏற்க மறுத்த இருவரும் தங்களது உறவைத் தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது பள்ளி நண்பரான மல்லாங்கிணறு வி.வி.வி நகரைச் சேர்ந்த ராஜா (19) என்பவரும் சேர்ந்து, நேற்று கீழத்துலுக்கன்குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை கத்தியால் பல இடங்களில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தலைமறைவான பிரபாகரன் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் அருப்புக்கோட்டை ஏஎஸ்பி மதிவாணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.