உக்ரைனில் சிக்கியுள்ள மகனின் நினைவில் உயிரைவிட்ட தாய்… வீடியோ காலில் சடலத்தை பார்த்து மகன் கதறல்… ஆம்பூரில் நடந்த சோக சம்பவம்…
Author: kavin kumar28 February 2022, 1:47 pm
வேலூர் : ஆம்பூரில் உக்ரைனில் சிக்கிய மகன் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்த தாய், எதிர்பாராவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர்-சசிகலா தம்பதியினர். இவரது மகன் சக்திவேல் உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் நடைப்பெற்று வரும் போர் பகுதியில் சிக்கியுள்ள தனது மகனை நினைத்து சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்த நிலையில், நேற்று மாலை எதிர்பாரா விதமாக மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சசிகலா செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சக்திவேல் மற்றும் அவருடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக அழைத்து வர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.