5 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப் போகும் கனமழை.. தயாரா இருங்க மக்களே!
Author: Hariharasudhan14 December 2024, 2:27 pm
விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (டிச.15) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு நாட்களில் நகரக்கூடும்.
நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். இதனால் இன்று (டிச.14) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நாளை மறுநாள் (டிச.16) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். முக்கியமாக, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் மீண்டும் இடைத்தேர்தல்… பதம் பார்க்க களமிறங்கும் தவெக : அரசியலில் திருப்பம்!
மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
வருகிற 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, டெல்டா மாவட்டங்கள் மற்றும், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அது மட்டுமல்லாமல், சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து காணப்படுகிறது.