நீட் என்றாலும் பயம்.. எடப்பாடி எழுந்தாலே பயம்.. சிக்கிய ‘தெனாலி’ வசன அமைச்சர்.. வச்சு செய்த எஸ்.பி.வேலுமணி!
Author: Hariharasudhan17 December 2024, 6:45 pm
அச்சம் என்ற சொல்லே எடப்பாடி அகராதியில் கிடையாது என அமைச்சர் கே.என்.நேருவுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார்.
கோயம்புத்தூர்: இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி, மக்களின் குரலாக வீறுகொண்டு ஒலிப்பதைக்கண்டு அஞ்சி நடுங்கி, விடியா திமுக மந்திரி நேரு பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம்.
அச்சம் என்ற சொல்லே எடப்பாடி அகராதியில் கிடையாது. “மக்களுக்காக உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம்” என்று எடப்பாடி சட்டப் பேரவையில் கர்ஜித்த போது, எதிர் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலைமையிலான மொத்த திமுக கூட்டமும் பயந்து நடுங்கியதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்த பிறகும், எங்களைப் பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், பல நூறு கோடி ரூபாய் கடன்களுக்குச் சொந்தக்காரர்களான உங்களுடைய குடும்பத்திற்கு, தற்போது அத்தனை கடனையும் அடைப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது ? மீண்டும் செல்வச் சீமானாக வலம் வருவது எப்படி என்பதை “பயம்” இல்லாமல் சொல்வாரா பம்(மிய)மல் நேரு ?
உங்கள் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த, இப்போதும் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில், குறுகிய காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாயை ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சுருட்டியதாகச் சொன்னாரே யார் அவர்கள் என்று “பயம்” இல்லாமல் சொல்வாரா பம்மல் நேரு?
இந்த 30,000 கோடி ரூபாய் உட்பட உங்களுடைய அனைத்து ஊழல்களும் அம்பலப்படும் என்பதால், ரெய்டுக்கும், வருமானவரித் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் “பயந்து” இந்தியா கூட்டணியில் இருந்தும் கூட, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அழைத்து கருணாநிதி நாணயத்தை வெளியிட்டு, ‘சூரியன்-தாமரை’ கூட்டணியை தமிழ்நாட்டு மக்களுக்கு திரையிட்டுக் காட்டியவர்களே நீங்கள் தானே!
மதுரை மாவட்டம், மேலூரில், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிப்ரவரி 2024ஆம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்க எல உரிமைக்காக ஒப்பந்தப் புள்ளி கோரியதில் இருந்து, 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டங்ஸ்டன் காங்க ஏலம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் வரை, அதாவது 10 மாதங்கள் நடுங்கி, ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக அரசு, எதிர்ப்பு தெரிவித்தோ, சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரியோ ஏன் கடிதம் எழுதவில்லை என்று மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் எழுப்பிய எக்ஸ் வலைதளக் கேள்விக்கு மதுரை, மேலூர் மக்களுக்கு பயமில்லாமல் பம்மல் நேரு பதில் அளிப்பாரா?
சிறுபான்மையினரின் காவலனாக போலி வேடமிடும் விடியா திமுக அரசு எதற்காக பயந்தது போய் சென்னையில் உள்ள NIA அலுவலகத்திற்கு கூடுதலாக காவல் நிலைய அங்கீகாரம் அளித்தது? அதுமட்டுமல்லாமல், தானாக FIR பதியும் அதிகாரத்தையும் அளித்தது எந்த பயத்தின் அடிப்படையில்?
பயம், பயம் என்று தெனாலி திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய பம்மல் நேருவுக்கு, நானும் அதே மேற்கோளைத் தர விழைகிறேன்; நீட் என்றால் பயம்! மேகதாது என்றால் பயம்! மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கலைஞர் டி.வி-யில் ரெய்டு பயம்! குடையின் நிறத்தையே மாற்றி வெள்ளைக் குடை காட்டும் அளவுக்கு பயம்! பிரஸ் மீட் என்றால் பயம்!
சட்டப் பேரவை என்றால் பயம்! நேரலை என்றால் இன்னும் பயம்! தற்போது டங்ஸ்டன் என்றால் பயம்! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்தாலே பயமோ பயம்! காற்றடித்தால் பயம் – துண்டுச் சீட்டு பறந்துவிடுமே என்பதால்!
அதனால்தான், 2 நாட்களில் சட்டமன்றத்தையே நடத்தும் ஸ்டாலின், எங்கள் பொதுச் எடப்பாடி பழனிசாமியுடைய அறிக்கைகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தனது அடிமை மந்திரிகள் மூலம் பதில் அளிக்கிறார் என்பதை பம்மல் நேரு பயமில்லாமல் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா?
திருச்சியின் தி.மு.க. தாதா தான்தான் என்று கூறும் இந்த நபரை, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மந்திரியான அன்பில் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மதிக்காத நிலை தான் உள்ளது. தங்களை சம்பாதிக்கவிடாமல், தொழில் செய்யவிடாமல் செயல்படுவதாக, சொந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.
தன் மகன் அருண் நேருவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மற்றும் மாப்பிளைக்கும், வாரிசுக்கும் இவர் கால் கழுவியதை சொல்லிச் சொல்லி திருச்சி உடன்பிறப்புகள் காரி துப்புகிறார்கள். தன்மான சிங்கமாக பீடு நடைபோடும் எடப்பாடி பற்றி பேசுவதற்கு, இவருக்கு எந்த அருகதையும் இல்லை.
“பயம்” மட்டுமே உருவான உண்மையான கோழை, ஸ்டாலினின் சீனியர் கொத்தடிமையாக இருந்து, மாநகராட்சி கவுன்சிலர்களின் அடிதடிகளை கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் நேருவுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி பேசுவதற்கு எள்ளளவும் அருகதை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை… பகீர் கிளப்பிய மனைவி!!
கே.என்.நேரு சொன்னது என்ன? முன்னதாக, நேற்று அமைச்சர் கே.என்.நேரு, “ தெனாலியின் பயப் பட்டியலை விட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியதாக இருக்கிறது. பாஜகவோடு கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபிக்கிறது
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுகவுக்கு எதிரான தீர்மானங்களில் கண்டனம் என்றும், மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் என குறிப்பிட்டு பாஜக பாசத்தை இபிஎஸ் வெளிப்படுத்துகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, ஆளுநர், ரெய்டு, சின்னம் பறிபோய்விடுமோ என்று எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல நீள்கிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.