அடுத்த பிரதமர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.. அது உங்கள் கையில் தான் இருக்கு ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!
Author: Babu Lakshmanan8 September 2023, 4:45 pm
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராகலாம் என்று சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூபாய் 605 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஐந்தாம் கட்ட பணிகளுக்காக, ராதாபுரம் அருகே சிதம்பரபுரத்தில் சபாநாயகர் அப்பாவு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்த பெண்களிடையே பேசும்போது, இன்னும் ஏழு தினங்களில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வீடு வந்து சேரும். யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது மத்திய அரசு நிதியை குறைத்துள்ளதால், தமிழக முதல்வர் மிகுந்த சிரமத்துடன் பணம் வழங்கி வருகின்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமராகலாம் அல்லது அவர் சுட்டிக் காட்டுபவர் பிரதமராகலாம். அப்படி முதல்வர் ஸ்டாலின் அல்லது சுட்டிக்காட்டுபவர் பிரதமராக இருந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக நீட்டிக்கப்பட்டு அவர்களுக்கான கூலியும் உயர்த்தப்படும். இவை அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள், என தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து “இந்தியா” கூட்டணி என்ற பெயரில் பல கட்டமாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று வரும் வேளையில், தமிழகத்தில் சபாநாயகர் அப்பாவு முதன்முதலாக மு.க ஸ்டாலின் பிரதமராகலாம் என கூறி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.