வங்கி கதவு, ஜன்னலை மூடி விட்டு… லாக்கர் முன்பு நெருப்பு மூட்டி நடந்த அக்னி பூஜை.. தருமபுரியில் வெடித்தது சர்ச்சை..!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 12:16 pm

தருமபுரி கடை வீதி பகுதியிலுள்ள, தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் தான் இந்த பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விடுமுறை தினமான (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பூஜை 8 .30 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் பணம், நகைகள், மதிப்பு மிகுந்த ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்கக்கூடிய லாக்கர் முன்பு சாமி படம் ஒன்றை வைத்து, அதன் இருபுறமும் குத்து விளக்கேற்றி வைத்து, நெருப்பு மூட்டி, புரோகிதர் ஒருவர் மூலம் மந்திரங்கள் சொல்லி அக்னி யாக பூஜையானது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து முடிந்திருப்பது தான் தருமபுரியில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

வங்கியின் துணை பதிவாளராக பணியாற்றி வரும் ராஜா என்பவர் அவரது மனைவியுடன் வங்கிக்குள் லாக்கர் முன்பு அமர்ந்தபடி பூஜையை நடத்தியதாகவும், மக்கள் நடமாட்டம் மிகுந்த கடை வீதி பகுதியிலுள்ள வங்கிக்குள் நடைபெற்ற இந்த பூஜை விவகாரம் வெளியே தெரிந்துவிடாதபடி, வங்கியின் ஜன்னல், கதவுகளை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு பூஜையை நடத்தியிருக்கின்றனர். வங்கியில் பணிபுரிந்து முறைகேட்டில் ஈடுபட்டு பணியை இழந்த முன்னாள் ஊழியர்களும், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலரும் இந்த பூஜையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

வங்கிக்குள், அதுவும் லாக்கர் முன்பு நெருப்பு மூட்டி எதற்காக இந்த அக்னி பூஜை நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வங்கி கணினி மயமாக்கும் சமயத்தில் அப்போது, பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று அது கண்டுபிடிக்கப்பட்டது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்த நிலையில், முறைகேடு சர்ச்சைக்குள் சிக்கிய அதே வங்கிக்குள், ஜோதிடர் ஒருவர் கூறிய ஆலோசனையின் பேரில், இந்த அக்னி யாக பூஜை நடைபெற்றதாகவும், வங்கிக்குள் நடைபெற்று வரும் தொடர் முறைகேடுகள், மோசடிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காகவும், துணை பதிவாளருக்கு நேரம் சரியில்லை என கூறப்பட்டதாலும், வங்கியிலுள்ளதை போல தங்களுக்கும் கட்டு கட்டாக பணம், தங்க நகைகள், செல்வம் வந்து சேரவும் இந்த பூஜை நடைபெற்றதாகவும், பேசப்பட்டு வருவது தருமபுரியில் பெரும் பரப்பை கிளப்பியிருக்கிறது

மக்களின் பொது சொத்தான வங்கிக்குள் தங்களது சொந்த விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள வங்கியை தவறாக பயன்படுத்தியும், ஆபத்தை அறிந்தும் நெருப்பு மூட்டி பூஜை நடத்தபட்டிருக்கிறது, நெருப்பால் எதாவது ஒரு வகையில் எதிர்பாராதவிதமாக அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தால், மொத்த வங்கியும் தீக்கு இரையாகியிருக்கும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

வங்கியை தங்களின் சொந்த விருப்பத்திற்காக பயன்படுத்தியுள்ள சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது, வங்கியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பூஜையில் ஈடுபட்டது யார் யார் என கண்டறிந்து உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?