பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை : தியாக திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிய இஸ்லாமியர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan29 ஜூன் 2023, 8:36 காலை
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மதீனா சிபிஎஸ்சி பள்ளி திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர். பள்ளி வாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை ஆற்றினார்.
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டுபொதுமக்களுக்கு தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி கூறியிருப்பதாவது:-
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படும் இந்நன்னாள் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை நமக்கு உணர்த்துகிறது.
மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை விழிப்புணர்வூட்டுவதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக போராடுவதிலும் இறைத்தூதர் இப்ராஹீமின் அறிவாற்றலும், துணிச்சலும், தியாகமும், அர்ப்பணிப்பும் நமக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன.
தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்நன்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும், நாட்டு மக்களுக்கு எதிரான பாசிச ஏதேச்சதிகார சக்திகளை வீழ்த்திட நாம் சபதமேற்போம்.
அனைத்து மக்களிடையேயும் அன்பு, பாசம், சகோதரத்துவத்தை ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படவும் இந்நாளில் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
இதேபோல் மேலப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பஜார் திடல், ஜின்னா திடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கலந்து கொண்டார்.
உடன் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி , ஜவஹர், தாவுத் ஹாஜியார், முஸ்தபா, ஜெய்னுல்ஆபிதீன் கட்சி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஏ.கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா இருந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் தொழுகையில் திரளாக கலந்து கொண்டனர்.
0
0