தமிழக மீனவர்கள் கைது விவகாரம்… இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் ; இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்!!
Author: Babu Lakshmanan18 January 2024, 4:31 pm
கடலுக்கு எல்லை கிடையாது திட்டமிட்டு இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதில்லை என்றும், தவறுதலாக அவர் வரும்போது மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கலந்து கொண்டார். அவரை முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்று சால்வை அணிவித்தார். இதன் பின்னர், ஒரு மணி நேரம் செந்தில் தொண்டைமான் ஜல்லிக்கட்டு பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் தொண்டைமான் கூறியதாவது :- தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும். அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இலங்கையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைவரும் முயற்சி எடுத்து வருகின்றோம். ஹாக்கி, டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு எப்படி சர்வதேச அங்கீகாரம் இருக்கிறதோ, அதேபோல் தமிழர்களின் கலாச்சாரமாக உள்ள ஜல்லிக்கட்டுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
இலங்கையில் ஜல்லிக்கட்டு நடந்ததால் சர்வதேச அங்கீகாரம் ஜல்லிக்கட்டு கிடைத்துள்ளது. அதேபோல், தமிழர்கள் வாழக்கூடிய மற்ற நாடுகளிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இலங்கை முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
இந்திய மீனவர்கள் திட்டமிட்டு இலங்கைக்கு வருவதில்லை. நான் தொடர்ந்து அதைக் கூறி வருகிறேன். கடலுக்கு எல்லை கிடையாது. கடலுக்கு அடியில் இலங்கையோ, இந்தியாவோ வரும்பொழுது தவறுதலாக வருகின்றனர். யாரும் திட்டமிட்டு சிறைக்கு செல்ல வேண்டும், தங்களது படகுகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று எண்ணி வருவது கிடையாது.
அப்படி வருபவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றோம். விரைவில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி மீனவர் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுப்பதற்கு முயற்சி செய்வேன், என்றார்.