செல்போன்கள் திருட்டு.. உல்லாசமாக இருந்தால் திருடியதை தருவதாக கூறிய திருடன்.. துணிச்சலோடு இளம்பெண்கள் செய்த செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 5:42 pm

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏகனாம்பேட்டை, செல்லியம்மன் நகரில் கருணாகரன் என்பவரது வீட்டில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த நான்கு இளம் பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பண்ருட்டி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள்.

வாடகை வீட்டிற்க்கு குடி வந்து ஐந்து தினங்களே ஆனதால் மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை இன்னும் செய்து கொள்ளவில்லை. கோடை காலம் என்பதாலும் மின்விசிறி இல்லா காரணத்தினாலும் அந்த வீட்டின் மொட்டை மாடியில் நான்கு பெண்களும் படுத்து தூங்குவார்கள்.

அதுபோல கடந்த 22.05.2024 ம் தேதி இரவு சுமார் 10.00 மணியளவில் மொட்டைமாடிக்கு சென்று தூங்கிவிட்டு, பிறகு 23.05.2024 ம் தேதி விடியற்காலை சுமார் 4.30 மணிக்கு எழுந்து வந்து வீட்டில் பார்க்கும்போது அங்கு வைத்திருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன், போகோ , ரெட் மி உள்ளிட்ட நான்கு செல்போன்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியுற்றனர்.

வேறொரு செல்போனில் இருந்து திருடு போன செல்போன்களுக்கு கால் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. மீண்டும் கால் செய்த போது, செல்போன் திருடிய மர்மநபர் ஒருவர் , இந்த செல்போனைகளை திரும்ப தரவேண்டும் என்றால் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும், அப்போதுதான் இந்த செல்போனைகளை கொடுப்பேன் என தீர்க்கமாக பேசி உள்ளார்.

மேலும் படிக்க: ஜூன் 4ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்… கருணாநிதி நினைவிடத்தில் சமர்பிப்போம் : CM ஸ்டாலின் மடல்!

அந்தத் திருடனின் பேச்சுகளால் செய்வதறியாது திகைத்த நான்கு இளம்பெண்களும் அவனுடைய ஆசைக்கு இணங்கியது போல பேசி அவனை அழைக்க முடிவு செய்தனர் .

அதன் தொடர்ச்சியாக அந்த திருடன் செல்போனில் பேசும்போதெல்லாம், இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அவனுடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த மர்ம நபருக்கு இந்த பெண்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. தன்னுடைய ஆசைக்கு இவர்கள் இணங்குவார்கள் என முடிவெடுத்து செல்போன்களை திருடிய பகுதிக்கே வர ஒப்புக்கொண்டான்.

அதன்படி 24ம் தேதி இரவு 10 மணியளவில் செல்போன் திருடிய வீட்டுக்கு ஆசையுடன் வந்த திருடன், முதலில் என்னுடைய ஆசையை தீர்த்தால்தான் செல்போன் தருவேன் என செல்போன்கள் பறிகொடுத்த பெண்களிடம் பேசினார்.

அதில் ஒரு பெண் துணிச்சலாக, கழிவறைக்கு உள்ளே செல்வோம் வா என அழைத்துள்ளார் .‌ அதை நம்பி உள்ள சென்ற திருடனை கழிவறையில் வைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்தனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அந்த திருடனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து வாலாஜாபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் செய்த விசாரணையில் , அந்த நபர் பெயர் சுதாகர் வயது 38, காஞ்சிபுரம் நாகலுத்து மேடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மனைவி பிரிந்து சென்று விட்டதால் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே இவர் மீது வழிப்பறி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

சுதாகரிடம் இருந்து நான்கு செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றி சுதாகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செல்போன்களை திருடியது மட்டுமல்லாமல் இளம் பெண்களை தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என வலியுறுத்தி , செல்போனில் அந்த இளம் பெண்களுடன் காமத்துடன் மாற்றி மாற்றி பேசி ,அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கிய இப்படிப்பட்ட காமுகன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 402

    0

    0