தூத்துக்குடியில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம்… ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிர்ப்பாளர்கள் பகிரங்க எச்சரிக்கை
Author: Babu Lakshmanan30 July 2022, 8:55 am
அரசுக்கு எதிராக, உயர்நிதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ச்சியாக செயல்பட்டால் மீண்டும் தூத்துக்குடியில் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு பல்வேறு இயக்கங்கள், மீனவ அமைப்புகள், வியாபாரி சங்கங்கள் ஆதரவாக இருப்பதாக அவ்வப்போது சிலர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து வந்த நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, குமரெட்டியாபுரம் மகேஷ், மெரினா பிரபு, தெர்மல் ராஜா, வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில் ராஜ் அவர்களிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை நயவஞ்சக சூழ்ச்சியோடு பொய்யான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வன்முறை, சமூக அமைதியை குலைக்க கூடிய அளவில் சில நயவஞ்சக சக்திகளை கொண்டு இயங்கி வருகிறது.
இதனை மாவட்ட நிர்வாகம், காவல்துறை வேடிக்கை பார்க்குமானால் நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. சமூக ஒற்றுமையை குலைக்கும் விதமாக, சாதி,மதம் சார்ந்த நபர்களை அழைத்து வந்து சதி செயலில் ஈடுபட்டு வருகிறது. சில அறிவு பூர்வ சக்திகள் காற்று, நீர் மாசு படவில்லை என்று கூறிவருகின்றனர். 815 உயர்நீதிமன்ற அறிக்கையில், காற்று, நீர் மாசுபடுதலை தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.
ஸ்டெர்லை ஆலை மூடப்பட பின் தான் மக்களுக்கு நல்ல முறையில் இயற்கை காற்று சுவாசிக்கின்றனர். இந்நிலையில், ஆலைக்கு ஆதரவாக சிலர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, அரசின் கொள்கை முடிவால் மூடப்பட ஆலை, உயர்நிதிமன்ற தீர்ப்பால் மூடப்பட ஆலை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக, உயர்நிதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆலை நிர்வாகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம், காவல் துறை நிர்வாகம் வேடிகைப்பார்க்கும்மானால் மக்கள் சார்ந்த போராட்டம் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும், என கூறினார்.