பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு: மண்டல நிர்வாகி காயம்..மர்மநபருக்கு வலைவீச்சு…கோவையில் பரபரப்பு.!!
Author: Rajesh11 February 2022, 11:37 am
கோவை: கோவையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் மர்ம நபர் வீசி தாக்குதல் நடத்தியதில் மண்டல துணைத் தலைவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சி 76வது வார்டில் திமுக சார்பில் ராஜ்குமார், அதிமுக சார்பில் கருப்புசாமி, பாஜக சார்பில் கார்த்திக் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
நேற்று இரவு 8 மணியளவில் பாஜக வேட்பாளர் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடன் 76வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோடு பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.
அவர்கள் தெலுங்குபாளையம்புதூர், ராஜீவ் நகர் தெருவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது. அப்போது யாரோ மர்ம நபர் பிரசார கூட்டத்தில் கல்வீசி தாக்கியதில் செல்வபுரம் மண்டல பாஜக துணைத்தலைவர் முனீஸ்வரன்(52) என்பவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
காயமடைந்த முனீஸ்வரனை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக-வினர் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.