வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் தெருநாய் கருத்தடை மையமா..? குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு எதிர்ப்பு
Author: Babu Lakshmanan14 March 2024, 4:00 pm
வெள்ளலூர் குப்பை கிடங்கு வழக்கு நிலுவையில் நிலையில், குப்பை கிடங்கு வளாகத்தில் தெரு நாய் கருத்தடை மய்யம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மையில் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் உயிரி எரிவாயு கலன் (BIO GAS PLANT) அமைப்பதற்கு பரிசீலனையில் உள்ளது என்றும் விரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தின் 03/10/2018 உத்தரவின்படி குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யவேண்டும் அதுபோல் ஏற்கனவே தேக்கிவைக்கபட்டுள்ள குப்பைகளை BIO MINING என்ற முறையில் அழித்து
நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தங்களது வாரியம் 31/03/2019 தேதிக்கு பிறகு வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016ன் படி கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குப்பை கிடங்ககில் திடக்கழிவு மேலாண்மை செய்ய அனுமதி வழங்கவில்லை. ஆகவே இந்த உயிரி எரிவாயு கலன் அமைப்பதற்கு தங்களது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்வதோடு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குப்பை கிடங்கு வளாகத்தில் தெரு நாய் கருத்தடை மையம் அமைக்க பூமி பூஜை நடந்துள்ளது.
மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல் இந்த மையத்தை செயல்படுவதற்கு தங்களது வாரியம் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், குப்பை கிடங்கின் அருகில் மாடு அறுவை மய்யம், குப்பை கிடங்கு வளாகத்தில் கோழி கழிவுகள் எரிப்பு மய்யம் ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன,
இன்றைய தேதி வரை வழக்கு எண்: 127/2022 விசாரணை பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே வழக்கு முடிவுக்கு வரும் வரை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் எந்த ஒரு புது திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம், என வலியுறுத்தப்பட்டுள்ளது.