கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை சூழ்ந்த தெருநாய்கள்.. 5 நிமிடங்களில் நடந்த ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2024, 12:53 pm
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப் பட்டியைச் சேர்ந்த ரமேஷ்- வடிவு தம்பதியின் மகள் சினேகா(22). சலவைத் தொழிலாளியான ரமேஷ் இறந்து விட்டதால் வடிவு கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
சினேகா அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்கிறார். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள சுடலை கோவிலுக்கு சினேகா சாமி கும்பிட சென்றுள்ளார்.
அப்போது அங்கு கூடி நின்ற தெரு நாய் கூட்டம் சினேகாவை சுற்றி வளைத்து துரத்தியுள்ளது.
அதிலிருந்து அவர் தப்பிக்க முயல்வதற்குள் நாய்கள் அவர் மீது விழுந்து கடித்து குதறின. இதனால் அவர் வலி தாங்காமல் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தெரு நாய்களை விரட்டி அடித்தனர்.
அப்போது நாய்கள் கடித்ததில் சினேகாவின் உடல் முழுவதும் 25 இடங்களுக்கு மேல் காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அங்கு இருந்தவர்கள் முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மேலும் நாய்க்கடி காயத்தால் சினேகாவின் உடலில் இருந்து ரத்தப் போக்கு தொடர்ந்து வெளியேறியதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி பகுதியில் நாய்கள் கூட்டமாக தெரிவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள் உள்பட பலரும் அச்சத்தில் உள்ளனர்.
ஆகவே மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.