ஸ்டிரைக் வாபஸ்.. 6 நாட்களுக்கு பிறகு தொலைதூர அரசுப் பேருந்துகள் சேவை இயக்கம் : ஆனா.. புதுச்சேரிக்கு மீண்டும் வந்த சோதனை!!
Author: Udayachandran RadhaKrishnan29 June 2022, 11:33 am
புதுச்சேரியில் 6 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படுகின்றது இருப்பினும் நகரப்பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை
புதுச்சேரியில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையே டைமிங்க் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 நாட்களாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப்பிரியங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டைமிங் விவகாரம் குறித்து தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே நடந்த தகராறில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை தாக்கியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இருப்பினும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதத்தில் செயல்பட்ட 12 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லக்கூடிய தொலைதூர பேருந்துகள் சேவை படிப்படியாக இயக்கப்படுகின்றது.
ஆனால் நகரப்பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.