இராவணக் கோட்டம் திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : படம் வெளியானால் போராட்டம் வெடிக்கும்.. வெளியான அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan11 May 2023, 9:21 pm
நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிகை ஆனந்தி நடித்துள்ள ராவணக் கோட்டம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்
இந்த நிலையில் இராவண கோட்டம் திரைப்படத்தில் மறைந்த முதல்வர் காமராஜர் பற்றி தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக நாடார் சமுதாய அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ராவணக் கோட்டம் திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என தென்மாவட்ட நாடார் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் அச்சுதானந்த நாடார் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராவணக் கோட்டம் திரைப்படத்தில் காமராஜர் பற்றியும் நாடார் சமுதாயம் பற்றியும் இழிவாக பேசி உள்ளனர்.
காமராஜர் ஆட்சியில் தான் கருவேலம் மரங்களை விதைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் தான் கருவேலம் மரங்களை கொண்டு வந்தனர். அப்போது சிலிண்டர் அடுப்புகள் இல்லாததால் விறகுகளை எரிப்பதற்காக ஆங்கிலேயர்கள் கருவேலை மரங்களை விதைத்தனர்.
ஆனால் காமராஜர் தான் கருவேல மரங்களை விதைத்தார் என்று சொல்வது மிக கீழ்த்தனமான செயல். எனவே ராவண கோட்டம் திரைப்படம் வெளிவந்தால் நாடார் சமுதாயம் சார்பில் அனைத்து மக்களும் திரண்டு திரையரங்கை முற்றுகையிடுவோம்.
எதற்கெடுத்தாலும் நாடார் சமுதாயத்தை குறை கூறுகின்றனர் ராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தெரிவித்தார் பேட்டியின்போது சிங்கை முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்