நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் தற்கொலை…. மீண்டும் உயிரை பறிக்கும் விளையாட்டு : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 2:49 pm

தருமபுரி : நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ் (வயது 20) பணிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிகளுக்காக அவருடைய தந்தை செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

இதில் அவர் முதலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றில் தீவிரமாக படித்து வந்த வெங்கடேஷ் அதில் வரும் கேம்கள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார்.

நாளடைவில் இந்த ஆர்வம் அதிகமாகவே பணம் கட்டி கேம்களில் விளையாட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார்.

அப்பொழுது அதில் 50 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இதில் மனவிரக்தி அடைந்தவர் கடும் மன உளைச்சலில் கடந்த 7ம் தேதி வேறுவழியின்றி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனை அடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

ஆன்லைன் கேம்கள் மற்றும் சூதாட்டங்களை கடந்த ஆட்சியில் தடை விதிக்கப்பட்டிருந்தது மீண்டும் திமுக ஆட்சி காலத்தில் அவறிற்க்கான தடை நீக்கப்பட்டதின் காரணமாக தொடர்ந்து மாணவர்கள் அதிகளவில் ஆன்லைன் கேம்கள் மற்றும் சூதாட்டங்களை ஈடுபட்டு பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகியுள்ளது.

இதனை தடுப்பதற்கு தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்க்கு தடைவிதிக்க வேண்டும் என்பது பல்வேறு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ