‘உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யணும்’: எம்.பி. கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்..!!

Author: Rajesh
9 March 2022, 12:40 pm

கோவை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோவையில் எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி சிறப்பாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுகிறது. எளிதில் அணுகக்கூடிய மற்றும் சுறு சுறுப்பான முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.

பிற மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்ற எக்ஸிட் போல் முடிவுகளை வைத்து தீர்மானிக்க முடியாது. தேர்தல் முடிவுகளை வைத்து தான் தீர்மானத்திற்கு வரமுடியும். உக்ரைன் நாட்டில் சிவகங்கை தொகுதியில் இருந்து மட்டும் 30 மாணவர்கள் சென்றுள்ளனர். இதுவரை 13 பேர் தான் வந்துள்ளனர். அந்த நாட்டில் மருத்துவ படிப்புக்கான செலவு குறைவு, அதே நேரத்தில் இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு சீட் குறைவாக உள்ளது.

படிக்க முடியாமல் இந்தியா வரும் மாணவர்களுக்கு வேறு நட்பு நாடுகளிலாவது மருத்துவ சீட் வாங்கிக் கொடுக்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். மேலும், அந்த மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும். ரஷ்யா-உக்ரை போர் விவகாரத்தில் என் பார்வை வித்தியாசமாக உள்ளது. போர் நடக்கக்கூடாது அப்பாவி மக்கள் கொல்லக்கூடாது. ஆனால் ரஷ்யா தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். உக்ரைன் வாதம் மட்டுமே பேசப்படுகிறது.

கோவையில் இருந்து சென்ற மாணவன் அங்கு இராணுவத்தில் இணைந்துள்ளார். இதே அப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சென்று இப்படி செய்தால் ஜிகாதி என்பார்கள். இதுவே உக்ரைனுக்கு சென்றால் நல்லது என்று ஆகாது.உக்ரைன் ஒரு கிறிஸ்தவ நாடு. அங்கு சென்று மாணவர்கள் ராணுவத்தில் இணைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சசிகலா இல்லாத அதிமுக தோற்றுக் கொண்டே இருக்கிறது. அதிமுக.,வுக்கு வாக்கு வங்கி உள்ளது. தலைமை ஒருங்கிணைப்பு இல்லை என்பதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இரட்டை தலைமையில் அதிமுக செழிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. பொருளாதாரத்தை திறம்பட நடத்த இந்த பா.ஜ.க அரசுக்கு தெரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது ஏற்க முடியாது. பொதுத்துறை விற்பனை அதானி குடும்பத்திற்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

எங்கள் கட்சி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ளது. எங்களுக்கு தலைமை இல்லை துணிச்சல் இல்லை என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் எம்.எல்.ஏ எம்.என் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், கோவை 69 வார்டு உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1197

    0

    0