மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல்… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் : போலீசார் குவிப்பு!!
Author: Babu Lakshmanan20 April 2023, 2:33 pm
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலாமாண்டு மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி தென்பாகம் காவல் நிலையம் மாணவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி (22). இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி காலை காமராஜ் கல்லூரியில் வைத்து தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு எழுதும் அறையில் ஏற்கனவே பாடம் நடத்திய போது, எழுதப்பட்ட விடைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை மாணவர்கள் தேர்வின் போது பார்த்து எழுதியதாக கூறப்படுகிறது. இதனால், தேர்வு எழுதிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதாக விஸ்காம் துறை பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் சீனிவாச மணிகண்டன் ஆகியோர் கூறினராம். இது தொடர்பாக மாணவன் நேசமணி விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளார். அப்போது ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து நேசமணியை அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவர்கள் இணைந்து கதவைத் திறந்து நேசமணியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது நேசமணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ குழு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அடித்ததாக கூறப்படும் ஆசிரியர்கள் இருவரை வழக்குபதிவு செய்துகைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என மாணவா்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தென்பாகம் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டு வருகின்றனர்.