9ஆம் வகுப்பு மாணவியின் ஆடையைக் கழற்றி வீடியோ எடுத்த மாணவர்கள்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!
Author: Hariharasudhan18 January 2025, 3:57 pm
கேரளா, கோட்டயத்தில் 9ஆம் வகுப்பு மாணவியின் ஆடைகளைக் கழற்றிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 10ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். பின்னர், தனது ஓய்வு நேரத்தில், வகுப்பறையில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த 7 மாணவர்கள், மாணவியின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டிய அம்மாணவர்கள், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்னர், அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி, வகுப்பறையில் தனது மகளுக்கு நேர்ந்த கொடூரச் செயலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இப்படி நடக்க காரணம் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவருதான்.. கோப்பையுடன் வெளியான போட்டோ!!
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரை வீடியோ எடுத்ததாக கூறப்படும் 7 மாணவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனிடையே, பள்ளியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.