அரசு மாணவர் விடுதியில் பசி, பட்டினியால் தவிக்கும் மாணவர்கள்… கட்டிடம் இடிந்து விழும் அபாயம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 12:42 pm

திண்டிவனத்தில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

விடுதியில் 115 மாணவர்களில் தற்போது 43 பேர் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அனைத்து மாணவர்களும் விடுதி வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்து தங்கி படித்து வருகிறோம். எங்கள் விடுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக விடுதி கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

படுத்து உறங்க பாய் மற்றும் மின்விசிறி ஏதும் இல்லாததால் கொசுக்கடியில் தூக்கம் இன்றி தவித்து வருகிறோம். மேலும் தரமற்ற உணவு வழங்குகின்றனர். அதிலும் குறைந்த அளவே வழங்குவதால் பல நாட்கள் பட்டினியாக இருந்து வருகிறோம்.

மேலும் விடுதி கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படுவதற்கு முன்னர், விடுதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கூறுகையில் இன்னும் ஒரு வாரத்தில் வேறு இடத்திற்கு மாற்றி தரப்படும் என உறுதி அளித்தார். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • Shankar Praises Lappar Panthu Movie அலட்டிக்காம நடிக்கிறாரு…உண்மையிலே அவர் கெத்து தா…பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய இயக்குனர் சங்கர்…!
  • Views: - 442

    0

    0