திமுக அரசு கொடுத்த இலவச புத்தகப்பையை கிழித்து வீசிய மாணவர்கள் : எடுத்து சேகரித்த ஆசிரியர்கள்…!!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2023, 12:44 pm
விழுப்புரம் : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்த புத்தகப் பை தரமற்றதாக இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கிழித்து பைகளில் ரோட்டில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் இன்று பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை கொடுக்கப்பட்டது.
இந்த பை அனைத்தும் தரம் இல்லாமல் கிழிந்த நிலையிலேயே கொடுத்ததால் மாணவர்கள் ஆத்திரமடைந்து வெளியே வந்து அனைத்து பைகளையும் கிழித்து எறிந்தனர்.
அப்போது விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மீதும் பைகளை வீசியவாறு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஒரு சில பைகள் சிறிதளவு கிழிந்த நிலையில் இருந்ததை எடுத்துக் கொண்டு சென்றனர்.
மேலும் ஒரு சில மாணவர்கள் பைகளை அருகில் இருந்த பிச்சைக்காரர்களிடம் தானமாக அளித்துவிட்டு சென்றனர். இதனை அடுத்து ஆசிரியர்கள் கிழிந்த பைகளை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இப்படி தரம் இல்லாத பைகளை மாணவர்களுக்கு கொடுத்து மக்கள் பணத்தை வீணாக்குவதை விட அவர்களின் வங்கி கணக்கில் இந்த புத்தகப்பை காண தொகையை போட்டால் சரியாக இருக்கும் என பொதுமக்கள் ஆலோசனை கூறினர்.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் இப்போது இந்த புத்தகப்பை கொடுப்பது எதற்காக என கேள்வி எழுப்பி உள்ளனர்.